ஈழம் வென்ற சோழன் போன்று
வேழப் பெருமிதம் விளங்கு(ம்) நடையினன்;
இமயம் வணக்கிய குட்டுவன் தனைப்போல்
அமைந்த தறுகண் அரிமா நோக்கினன்;
சங்கம் வளர்த்த பாண்டியர் வழியில்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்திடுவான்;
பொங்கும் அன்பினன்; பொலிவுறு முகத்தினன்;
புலமைச் சிறப்பில் தலைமை நிறுவியோன்;
அமிழ்தத் தமிழும் ஆங்கில மொழியும்
அறிஞன் இவனைச் செவிலியாய் ஏற்றன;
கீட்சும் செல்லியும் சேக்சு பியரும்
கிளர்ச்சிகொள் தமிழில் ஆக்கித் தருவான்;
வாசகர் வட்டம் என்னுமோர் அமைப்பால்
வாட்டம் நீங்கி நூலாசிரியர்
ஊக்கம் பெற்றிட உறுதுணை பயப்பான்;
பாங்கார் நிறுவனம் பச்சையப்பனில்
பயின்ற மாணவர் மெச்சும் அப்பன்:
உலக இலக்கியப் படைப்பில் ஊற்றமும்
உயர்தமிழ் மரபில் பிறழா ஏற்றமும்
புதினம் சிறுகதை நாடகம் கட்டுரை
ஒப்பியல் மெய்ப்பொருள் எனப்பல துறையில்
செறிந்த கல்வியும் தெளிந்த ஆய்வும்
வாய்க்கப் பெற்றுள வண்டமிழ்ப் புலவன்;
இவனைப் போன்று இன்னொரு தமிழனை
இதுவரை யானும் கண்டிலேன்; உண்மை
பல்துறைப் புலமை;பைந்தமிழ்த் தொண்டு
இரண்டும் திரண்ட ஓருருக் கொண்டோன்;
சாயா நடுநிலை, ஓயா உழைப்பு,
புலவரைச் சுற்றமாய்த் தழுவும் பெட்பு,
உடுக்கை இழந்தவன் கைபோல் நட்பு,
பண்பினில் இமயமாய் நண்பரை ஈர்க்கும்
அன்பினில் சிறந்த அண்ணலே! திருமிகு
குருநாதன் எனும் குன்றாப் புலமைப்
பெருமிதத் தமிழனே! வாழிய!வாழிய!
மனைவி மக்கள் சுற்றம்
இணையிலாச் சிறப்புடன் இனிது வாழியவே!