Tuesday, November 11, 2008

செயதேவன் எனும் செம்மல் வாழ்கவே


புலனழுக் கற்ற புகழ்மிகு கபிலர்

நலமிகச் சிறந்திட நற்றுணை நல்கிப்

பறம்பிற் கோமான் பாரி விளங்கினான்;

செவ்விய புலமைச் சீர்சால் அவ்வை

எவ்வம் துடைத்திட அதிகன் இருந்தான்;

பரணர் கருத்தொடு முரணிலாப் பேகனும்

கம்பர் வளம்பெற வழங்கிய சடையனும்

வரலாறு (உ)ணர்த்தும் வான்புகழ் துணைவர்;

அற்றைப் புலவர் அல்லல் களைந்திட

இவர்போல் இயங்கிய வள்ளல் பலரும்

புலவர் இயற்றிய இலக்கியம் தன்னை

உலகெலாம் பரப்பிட உழைத்ததும் உண்டோ?

இன்றமிழ்க் கவிஞருள் இமயம்;என்றும்

பொன்றாப் புகழினர்; குன்றாக் கொள்கைத்

தமிழன்பன் புகழ் புவியெலாம் பரவிடத்

தக்காங்கு(உ)ழைத்த தமிழ்ப்பே ராசான்

செயதேவன் திறம் செப்புதல் எளிதோ?

மக்கள் தொடர்பிலாப் பல்கலைக் கழகம்

தக்க பயனிலாப் பல்பிழைக் கலகம்

மிக்க சிக்கலை விளைத்திடும் என்றே

கருதும் உளத்தர்; கருத்தரங்கம் பல

சிறப்புற நடைபெறப் பொறுப்புடன் உழைப்பவர்;

வாழும் கவிஞர் வான்புகழ் பரப்பிட

நாளும் உழைத்துத் திட்டம் தீட்டித்

தமிழன்பர் நூல் அனைத்தும் ஆய்ந்திட

மாநாடு கண்ட மாண்புறு புலவர்;

ஒழிவு ஓய்விலா மொழித்துறைத் தலைவர்;

அகராதியியலில் நிகரிலா அறிஞர்;

இருமொழிப் புலமையும் கணினி நுட்பமும்

பெருமித உள்ளமும் பெற்றிலங்குபவர்;

முறுவல் நிலவும் ஒளிதிகழ் முகத்தினர்;

மாணவர் தமக்குத் தாயும் ஆனவர்;

ஆய்வு சிறந்திட அரும்பணி ஆற்றுவார்;

அன்பும் பண்பும் நெறியெனப் போற்றுவார்;

புகையிலை தவிரப் பகையெதும் அறியாத்

தகைசால் நண்பினர்; மிகையிலா உரையினர்;

செயதேவன் எனும் செம்மல் பலப்பல

உயர்வுகள் பெறுக! சிறப்பும் சீர்த்தியும்

நலனும் வளனும் பொலிவும் வலிவும்

பொங்குக! இன்பம் தங்குக! அன்புடை

மனைவி மக்கள் மற்றுள சுற்றம்

அனைவரும் மகிழ்வுடன் வாழிய! வாழிய!

வங்கக் கரையின் மணலினும் பன்னாள்

வாழ்க வாழ்கவே! வளமெலாம் சூழ்கவே!

No comments: