Tuesday, November 11, 2008

பேராசிரியர் இராம குருநாதன் வாழியவே


ஈழம் வென்ற சோழன் போன்று

வேழப் பெருமிதம் விளங்கு(ம்) நடையினன்;

இமயம் வணக்கிய குட்டுவன் தனைப்போல்

அமைந்த தறுகண் அரிமா நோக்கினன்;

சங்கம் வளர்த்த பாண்டியர் வழியில்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்திடுவான்;

பொங்கும் அன்பினன்; பொலிவுறு முகத்தினன்;

புலமைச் சிறப்பில் தலைமை நிறுவியோன்;

அமிழ்தத் தமிழும் ஆங்கில மொழியும்

அறிஞன் இவனைச் செவிலியாய் ஏற்றன;

கீட்சும் செல்லியும் சேக்சு பியரும்

கிளர்ச்சிகொள் தமிழில் ஆக்கித் தருவான்;

வாசகர் வட்டம் என்னுமோர் அமைப்பால்

வாட்டம் நீங்கி நூலாசிரியர்

ஊக்கம் பெற்றிட உறுதுணை பயப்பான்;

பாங்கார் நிறுவனம் பச்சையப்பனில்

பயின்ற மாணவர் மெச்சும் அப்பன்:

உலக இலக்கியப் படைப்பில் ஊற்றமும்

உயர்தமிழ் மரபில் பிறழா ஏற்றமும்

புதினம் சிறுகதை நாடகம் கட்டுரை

ஒப்பியல் மெய்ப்பொருள் எனப்பல துறையில்

செறிந்த கல்வியும் தெளிந்த ஆய்வும்

வாய்க்கப் பெற்றுள வண்டமிழ்ப் புலவன்;

இவனைப் போன்று இன்னொரு தமிழனை

இதுவரை யானும் கண்டிலேன்; உண்மை

பல்துறைப் புலமை;பைந்தமிழ்த் தொண்டு

இரண்டும் திரண்ட ஓருருக் கொண்டோன்;

சாயா நடுநிலை, ஓயா உழைப்பு,

புலவரைச் சுற்றமாய்த் தழுவும் பெட்பு,

உடுக்கை இழந்தவன் கைபோல் நட்பு,

பண்பினில் இமயமாய் நண்பரை ஈர்க்கும்

அன்பினில் சிறந்த அண்ணலே! திருமிகு

குருநாதன் எனும் குன்றாப் புலமைப்

பெருமிதத் தமிழனே! வாழிய!வாழிய!

மனைவி மக்கள் சுற்றம்

இணையிலாச் சிறப்புடன் இனிது வாழியவே!

செயதேவன் எனும் செம்மல் வாழ்கவே


புலனழுக் கற்ற புகழ்மிகு கபிலர்

நலமிகச் சிறந்திட நற்றுணை நல்கிப்

பறம்பிற் கோமான் பாரி விளங்கினான்;

செவ்விய புலமைச் சீர்சால் அவ்வை

எவ்வம் துடைத்திட அதிகன் இருந்தான்;

பரணர் கருத்தொடு முரணிலாப் பேகனும்

கம்பர் வளம்பெற வழங்கிய சடையனும்

வரலாறு (உ)ணர்த்தும் வான்புகழ் துணைவர்;

அற்றைப் புலவர் அல்லல் களைந்திட

இவர்போல் இயங்கிய வள்ளல் பலரும்

புலவர் இயற்றிய இலக்கியம் தன்னை

உலகெலாம் பரப்பிட உழைத்ததும் உண்டோ?

இன்றமிழ்க் கவிஞருள் இமயம்;என்றும்

பொன்றாப் புகழினர்; குன்றாக் கொள்கைத்

தமிழன்பன் புகழ் புவியெலாம் பரவிடத்

தக்காங்கு(உ)ழைத்த தமிழ்ப்பே ராசான்

செயதேவன் திறம் செப்புதல் எளிதோ?

மக்கள் தொடர்பிலாப் பல்கலைக் கழகம்

தக்க பயனிலாப் பல்பிழைக் கலகம்

மிக்க சிக்கலை விளைத்திடும் என்றே

கருதும் உளத்தர்; கருத்தரங்கம் பல

சிறப்புற நடைபெறப் பொறுப்புடன் உழைப்பவர்;

வாழும் கவிஞர் வான்புகழ் பரப்பிட

நாளும் உழைத்துத் திட்டம் தீட்டித்

தமிழன்பர் நூல் அனைத்தும் ஆய்ந்திட

மாநாடு கண்ட மாண்புறு புலவர்;

ஒழிவு ஓய்விலா மொழித்துறைத் தலைவர்;

அகராதியியலில் நிகரிலா அறிஞர்;

இருமொழிப் புலமையும் கணினி நுட்பமும்

பெருமித உள்ளமும் பெற்றிலங்குபவர்;

முறுவல் நிலவும் ஒளிதிகழ் முகத்தினர்;

மாணவர் தமக்குத் தாயும் ஆனவர்;

ஆய்வு சிறந்திட அரும்பணி ஆற்றுவார்;

அன்பும் பண்பும் நெறியெனப் போற்றுவார்;

புகையிலை தவிரப் பகையெதும் அறியாத்

தகைசால் நண்பினர்; மிகையிலா உரையினர்;

செயதேவன் எனும் செம்மல் பலப்பல

உயர்வுகள் பெறுக! சிறப்பும் சீர்த்தியும்

நலனும் வளனும் பொலிவும் வலிவும்

பொங்குக! இன்பம் தங்குக! அன்புடை

மனைவி மக்கள் மற்றுள சுற்றம்

அனைவரும் மகிழ்வுடன் வாழிய! வாழிய!

வங்கக் கரையின் மணலினும் பன்னாள்

வாழ்க வாழ்கவே! வளமெலாம் சூழ்கவே!

Tuesday, August 19, 2008

மின்னூர் சீனிவாசன்


கவிஞர் மின்னூர் சீனிவாசன் அவர்கள் எழில்கலை மன்றத்த்கினருடன் இணைந்து
கவிக்குயிலைப் பாராட்டினார்.

சௌந்தரா கைலாசம் அவர்களுக்குப் பாராட்டு-3


பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கவிக்குயில் அவர்களைப் பற்ரித் தாம் வெளியிட்ட வலைப்பூவைப் படிக்கிறார்.

சௌந்தரா கைலாசம் அவர்களுக்குப் பாராட்டு-2

கவிஞர் வேணு.குணசேகரன் அவர்கள் கவிக்குயில் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்.மறைமலை இலக்குவனார் பொன்னாடையுடன் காத்துநிற்கிறார்.

சௌந்தரா கைலாசம் அவர்களுக்குப் பாராட்டு-1

எழில் கலைமன்றத்தினர் கவிக்குயில் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும் காட்சி.

கவிக்குயில் சௌந்தரா கைலாசம் அவர்களுக்குக் கவிஞர்களின் வாழ்த்து

பாவேந்தர்மரபுக் கவிஞர்களுள் ஒருவராகிய வேணு.குணசேகரன் அவர்கள் நமது
போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவர்.மரபிலக்கணநெறி போற்றி மனங்கவரும் பாக்களை யாத்துவரும் இவர் இயற்றிய “போர்வாளும் பீரங்கியும்” என்னும் தலைப்பிலமைந்த குறுங்காப்பியம் வீரபாண்டியக் கட்டபொம்மனின்
எழுச்சிமிகு வரலாறுணர்த்தும் சிறப்புமிகு குறுங்காப்பியமாகும். திருப்பாவை,திருவெம்பாவை போன்று திருத்தமிழ்ப்பாவை எனும் உருக்கமிகு நூலியற்றித் தமிழன்னையை மனங்கனியப்போற்றும் மாண்பமை நூல் வழங்கித் தமிழரின் மொழியுணர்வுக்குத் தக்க ஊக்கமருந்து வழங்கியுள்ளார்.
இவர் அமைப்பாளராகவும் நிறுவனராகவும் அயராது பணிபுரிந்து “எழில் கலை மன்றம்” என்னும் அமைப்பைக் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார்.
இந்த அமைப்பின் சார்பில் திங்கள்தோறும் பாட்டரங்கம்,உரையரங்கம் ஆகியன நடத்திவருகிறார்.
வங்கி அலுவலராகிய இவர் திங்கள்தோறும் யாப்பிலக்கண வகுப்பு நடத்தி
இளங்கவிஞர்களை முறையான மரபிலக்கண நெறிக்கு ஆற்றுப்படுத்திவரும் செய்தி நம் மனத்தை மகிழ்விக்கும் மற்றொரு செய்தியாகும்.
அகவைமுதிர்ந்த தமிழ்ச்சான்றோர்களை அவர்களது இல்லத்துக்கே சென்று கண்டு,விருது வழங்கிப் பாராட்டி உயிர்தளிர்ப்பச் செய்துவருகிறார்.
இரண்டு திங்களுக்கு முன்னர் ஆட்சிமொழியறிஞர் கோ.முத்துப்பிள்ளை அவர்களை,அவரது இல்லத்துக்கே சென்று விருது வழங்கிப் பாராட்டிவந்தார்.
16/8/08 ஞாயிற்றுக்கிழமையன்று,இவரும் இவரது எழில்கலைமன்றத்தினரும்,
கவிக்குயில் சௌந்தரா கைலாசம் அவர்களை,அவரது இல்லத்துக்கே சென்று
பாராட்டிவந்துள்ளார்.
கவிக்குயில் சௌந்தரா கைலாசம்,தமிழ்நாட்டின் மூத்த கவிஞர்களுள் ஒருவர்.
நாட்டுப்பற்றையும் தமிழ்ப்பற்றையும் வளர்க்கும் நல்ல கவிதைகள் பலவற்றை யாத்தளித்துள்ளார்.
அவரைச் சென்று பார்த்துப் பாராட்டிய பாவலர்களும்,இத்தகு சிறப்புமிகு பணியை ஆற்றிவரும் வேணு.குணசேகரன் அவர்களும் நமது வாழ்த்துக்கு என்றென்றும் உரியவர்கள்.