Thursday, March 27, 2008

வா.மு.சேதுராமன்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் புறநானூற்று வீரமெல்லாம்
ஒருங்கு திரண்டு வந்ததைப்போன்ற எழுச்சியும் கிளர்ச்சியும் மிக்க உருவினர்.
‘கெடல் எங்கே தமிழின் நலன்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!'
என்னும் பாவேந்தர் வாக்கே தம் வாழ்வுக் குறிக்கோள் எனக் கொண்டு அல்லும் பகலும் அருந்தமிழுக்குத் தொண்டாற்றுபவர்.உலகின் எந்த மூலையில் தமிழர் இடருற்றாலும் ஓடோடிச் சென்று உறுதுணை புரிய உழைப்பவர்.உலக உருண்டையை ஐம்பது முறை வலம் வந்தவர்.
நூறாயிரம் பாடல்களுக்கு மேல் தமிழ்க்கவிதை யாத்து நூற்றுக் கணக்கான
நூல்களை வெளியிட்டவர்.அவரை வாழ்த்தினால் அனைத்துத் தமிழ்த்தொண்டர்களையும் வாழ்த்தியதற்கு ஒப்பாகும்.எனவே அவரை வாழ்த்துவதில் பேருவகை கொள்கிறோம்.
ஆண்ட நாள் ஆண்ட பாண்டியன் போலவே
நீண்டு உயர்ந்த நெடிய தோற்றம்;
பூண்ட செருக்கிளர் பூலித்தேவனோ?
மீண்டு வந்த கட்டபொம்மனோ?
கரிகால் வளவனோ? செங்குட் டுவனோ?
ஆரியர்ச் சாய்த்த நெடுஞ்செழியனோ?
யாரிவன்? என்றே திகைக்கச் செய்யும்
சீரிய தோற்றம்; நேரிய சிந்தை;
கூரிய மதிநலன்; நினைவெலாம் தமிழ்நலன்;
குழந்தை போன்றே குமிழிடும் முறுவலன்;
அழகினில் முருகன்; பழகுதற் கினியன்;
நாடு சமயம் கட்சி என்னும்
வரம்புகள் தகர்த்தே அன்பரைப் பெற்றவன்;
ஆதி ராமனோ ஆரியர் திலகம்;
சேது ராமனோ செந்தமிழ்த் தலைவன்;
ஒவ்வொரு நொடியும் ஒண்டமிழ் நலனே
செவ்விதிற் காக்கச் செயற்படும் மறவன்;
அற்றைக் கீரர் பிற்றை இலக்குவர்
ஓருருக் கொண்ட அஞ்சா நெஞ்சினன்;
அன்னைத் தமிழ்நலன் போற்றிடும் பணியில்
சென்னைக் கோட்டை தில்லிசெங் கோட்டை
அண்ணல் இவனது அறிவுரை கேட்கும்;
ஆட்சி பயிற்சி அனைத்துத் துறையிலும்
மாட்சி பெற்று மாத்தமிழ் சிறந்திட
வாழ்நாள் எல்லாம் வருந்தி உழைப்பவன்;
உரிமை அடந்திட உயர்தமிழ் சிறந்திட
பெருமிதம் பொங்கிடப் பெருநடைப் பயணம்
சிறப்புடன் நடத்திடும் சீர்மை மிக்கவன்;
ஒண்டமிழ்க் கவிநலன் உலகோர் போற்றிட
உலகெலாம் வலம்வரும் ஒப்பிலாச் சிறப்பினன்;
தமிழின் தலைவன் இவன் என்பதால்
அமிழ்தத் தமிழால் போற்றி வணங்குவேன்;
பெருமைத் துணைவி சேதுமதியின்
பிரிவால் பெற்ற பெருந்துயர் மாற்றித்
தாயுமாகிப் புதல்வரைத் தாங்குக!
உரிமை மக்களும் உயர்புகழ்ச் சுற்றமும்
வையை யாற்று மணலினும் பன்னாள்
வாழிய! வாழிய! வண்டமிழ் போன்றே!

No comments: