Tuesday, November 11, 2008

பேராசிரியர் இராம குருநாதன் வாழியவே


ஈழம் வென்ற சோழன் போன்று

வேழப் பெருமிதம் விளங்கு(ம்) நடையினன்;

இமயம் வணக்கிய குட்டுவன் தனைப்போல்

அமைந்த தறுகண் அரிமா நோக்கினன்;

சங்கம் வளர்த்த பாண்டியர் வழியில்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்திடுவான்;

பொங்கும் அன்பினன்; பொலிவுறு முகத்தினன்;

புலமைச் சிறப்பில் தலைமை நிறுவியோன்;

அமிழ்தத் தமிழும் ஆங்கில மொழியும்

அறிஞன் இவனைச் செவிலியாய் ஏற்றன;

கீட்சும் செல்லியும் சேக்சு பியரும்

கிளர்ச்சிகொள் தமிழில் ஆக்கித் தருவான்;

வாசகர் வட்டம் என்னுமோர் அமைப்பால்

வாட்டம் நீங்கி நூலாசிரியர்

ஊக்கம் பெற்றிட உறுதுணை பயப்பான்;

பாங்கார் நிறுவனம் பச்சையப்பனில்

பயின்ற மாணவர் மெச்சும் அப்பன்:

உலக இலக்கியப் படைப்பில் ஊற்றமும்

உயர்தமிழ் மரபில் பிறழா ஏற்றமும்

புதினம் சிறுகதை நாடகம் கட்டுரை

ஒப்பியல் மெய்ப்பொருள் எனப்பல துறையில்

செறிந்த கல்வியும் தெளிந்த ஆய்வும்

வாய்க்கப் பெற்றுள வண்டமிழ்ப் புலவன்;

இவனைப் போன்று இன்னொரு தமிழனை

இதுவரை யானும் கண்டிலேன்; உண்மை

பல்துறைப் புலமை;பைந்தமிழ்த் தொண்டு

இரண்டும் திரண்ட ஓருருக் கொண்டோன்;

சாயா நடுநிலை, ஓயா உழைப்பு,

புலவரைச் சுற்றமாய்த் தழுவும் பெட்பு,

உடுக்கை இழந்தவன் கைபோல் நட்பு,

பண்பினில் இமயமாய் நண்பரை ஈர்க்கும்

அன்பினில் சிறந்த அண்ணலே! திருமிகு

குருநாதன் எனும் குன்றாப் புலமைப்

பெருமிதத் தமிழனே! வாழிய!வாழிய!

மனைவி மக்கள் சுற்றம்

இணையிலாச் சிறப்புடன் இனிது வாழியவே!

செயதேவன் எனும் செம்மல் வாழ்கவே


புலனழுக் கற்ற புகழ்மிகு கபிலர்

நலமிகச் சிறந்திட நற்றுணை நல்கிப்

பறம்பிற் கோமான் பாரி விளங்கினான்;

செவ்விய புலமைச் சீர்சால் அவ்வை

எவ்வம் துடைத்திட அதிகன் இருந்தான்;

பரணர் கருத்தொடு முரணிலாப் பேகனும்

கம்பர் வளம்பெற வழங்கிய சடையனும்

வரலாறு (உ)ணர்த்தும் வான்புகழ் துணைவர்;

அற்றைப் புலவர் அல்லல் களைந்திட

இவர்போல் இயங்கிய வள்ளல் பலரும்

புலவர் இயற்றிய இலக்கியம் தன்னை

உலகெலாம் பரப்பிட உழைத்ததும் உண்டோ?

இன்றமிழ்க் கவிஞருள் இமயம்;என்றும்

பொன்றாப் புகழினர்; குன்றாக் கொள்கைத்

தமிழன்பன் புகழ் புவியெலாம் பரவிடத்

தக்காங்கு(உ)ழைத்த தமிழ்ப்பே ராசான்

செயதேவன் திறம் செப்புதல் எளிதோ?

மக்கள் தொடர்பிலாப் பல்கலைக் கழகம்

தக்க பயனிலாப் பல்பிழைக் கலகம்

மிக்க சிக்கலை விளைத்திடும் என்றே

கருதும் உளத்தர்; கருத்தரங்கம் பல

சிறப்புற நடைபெறப் பொறுப்புடன் உழைப்பவர்;

வாழும் கவிஞர் வான்புகழ் பரப்பிட

நாளும் உழைத்துத் திட்டம் தீட்டித்

தமிழன்பர் நூல் அனைத்தும் ஆய்ந்திட

மாநாடு கண்ட மாண்புறு புலவர்;

ஒழிவு ஓய்விலா மொழித்துறைத் தலைவர்;

அகராதியியலில் நிகரிலா அறிஞர்;

இருமொழிப் புலமையும் கணினி நுட்பமும்

பெருமித உள்ளமும் பெற்றிலங்குபவர்;

முறுவல் நிலவும் ஒளிதிகழ் முகத்தினர்;

மாணவர் தமக்குத் தாயும் ஆனவர்;

ஆய்வு சிறந்திட அரும்பணி ஆற்றுவார்;

அன்பும் பண்பும் நெறியெனப் போற்றுவார்;

புகையிலை தவிரப் பகையெதும் அறியாத்

தகைசால் நண்பினர்; மிகையிலா உரையினர்;

செயதேவன் எனும் செம்மல் பலப்பல

உயர்வுகள் பெறுக! சிறப்பும் சீர்த்தியும்

நலனும் வளனும் பொலிவும் வலிவும்

பொங்குக! இன்பம் தங்குக! அன்புடை

மனைவி மக்கள் மற்றுள சுற்றம்

அனைவரும் மகிழ்வுடன் வாழிய! வாழிய!

வங்கக் கரையின் மணலினும் பன்னாள்

வாழ்க வாழ்கவே! வளமெலாம் சூழ்கவே!

Tuesday, August 19, 2008

மின்னூர் சீனிவாசன்


கவிஞர் மின்னூர் சீனிவாசன் அவர்கள் எழில்கலை மன்றத்த்கினருடன் இணைந்து
கவிக்குயிலைப் பாராட்டினார்.

சௌந்தரா கைலாசம் அவர்களுக்குப் பாராட்டு-3


பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கவிக்குயில் அவர்களைப் பற்ரித் தாம் வெளியிட்ட வலைப்பூவைப் படிக்கிறார்.

சௌந்தரா கைலாசம் அவர்களுக்குப் பாராட்டு-2

கவிஞர் வேணு.குணசேகரன் அவர்கள் கவிக்குயில் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்.மறைமலை இலக்குவனார் பொன்னாடையுடன் காத்துநிற்கிறார்.

சௌந்தரா கைலாசம் அவர்களுக்குப் பாராட்டு-1

எழில் கலைமன்றத்தினர் கவிக்குயில் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும் காட்சி.

கவிக்குயில் சௌந்தரா கைலாசம் அவர்களுக்குக் கவிஞர்களின் வாழ்த்து

பாவேந்தர்மரபுக் கவிஞர்களுள் ஒருவராகிய வேணு.குணசேகரன் அவர்கள் நமது
போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியவர்.மரபிலக்கணநெறி போற்றி மனங்கவரும் பாக்களை யாத்துவரும் இவர் இயற்றிய “போர்வாளும் பீரங்கியும்” என்னும் தலைப்பிலமைந்த குறுங்காப்பியம் வீரபாண்டியக் கட்டபொம்மனின்
எழுச்சிமிகு வரலாறுணர்த்தும் சிறப்புமிகு குறுங்காப்பியமாகும். திருப்பாவை,திருவெம்பாவை போன்று திருத்தமிழ்ப்பாவை எனும் உருக்கமிகு நூலியற்றித் தமிழன்னையை மனங்கனியப்போற்றும் மாண்பமை நூல் வழங்கித் தமிழரின் மொழியுணர்வுக்குத் தக்க ஊக்கமருந்து வழங்கியுள்ளார்.
இவர் அமைப்பாளராகவும் நிறுவனராகவும் அயராது பணிபுரிந்து “எழில் கலை மன்றம்” என்னும் அமைப்பைக் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார்.
இந்த அமைப்பின் சார்பில் திங்கள்தோறும் பாட்டரங்கம்,உரையரங்கம் ஆகியன நடத்திவருகிறார்.
வங்கி அலுவலராகிய இவர் திங்கள்தோறும் யாப்பிலக்கண வகுப்பு நடத்தி
இளங்கவிஞர்களை முறையான மரபிலக்கண நெறிக்கு ஆற்றுப்படுத்திவரும் செய்தி நம் மனத்தை மகிழ்விக்கும் மற்றொரு செய்தியாகும்.
அகவைமுதிர்ந்த தமிழ்ச்சான்றோர்களை அவர்களது இல்லத்துக்கே சென்று கண்டு,விருது வழங்கிப் பாராட்டி உயிர்தளிர்ப்பச் செய்துவருகிறார்.
இரண்டு திங்களுக்கு முன்னர் ஆட்சிமொழியறிஞர் கோ.முத்துப்பிள்ளை அவர்களை,அவரது இல்லத்துக்கே சென்று விருது வழங்கிப் பாராட்டிவந்தார்.
16/8/08 ஞாயிற்றுக்கிழமையன்று,இவரும் இவரது எழில்கலைமன்றத்தினரும்,
கவிக்குயில் சௌந்தரா கைலாசம் அவர்களை,அவரது இல்லத்துக்கே சென்று
பாராட்டிவந்துள்ளார்.
கவிக்குயில் சௌந்தரா கைலாசம்,தமிழ்நாட்டின் மூத்த கவிஞர்களுள் ஒருவர்.
நாட்டுப்பற்றையும் தமிழ்ப்பற்றையும் வளர்க்கும் நல்ல கவிதைகள் பலவற்றை யாத்தளித்துள்ளார்.
அவரைச் சென்று பார்த்துப் பாராட்டிய பாவலர்களும்,இத்தகு சிறப்புமிகு பணியை ஆற்றிவரும் வேணு.குணசேகரன் அவர்களும் நமது வாழ்த்துக்கு என்றென்றும் உரியவர்கள்.

Monday, April 14, 2008

அமெரிக்காவில் ஒரு தொல்காப்பியர்



அமெரிக்காவில் ஒரு -தொல்காப்பியர் ---


மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியர் அவர் காலத்தில் நிலவிய அனைத்துக் கலைகளையும் அறிந்திருந்தார் என்பதற்குத் தொல்காப்பியமே தக்க சான்றாக விளங்குகிறது.


உளவியல் பற்றி மெய்ப்பாட்டியலும் அகப் பொருள் குறித்த நூற்பாக்களும் சமூகவியல் பற்றிப் பொருள்அதிகாரம் முழுமையும் திறம்பட விளக்குகின்றன.தொல்காப்பியர் காலத்தில் கிளைமொழிகளாக விளங்கிய


ஏனைய திராவிடமொழிகள் பற்றியும் வடபுலத்தில் நிலவிய பிராக்கிருதம்,அபப்பிரம்சம் பற்றியும் தொல்காப்பியத்தில் குறிப்புகள் கிடைக்கின்றன.


இதுபோன்றே இன்றைய தொல்காப்பியர் எனக் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்காவில் வாழும் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார்.


ஒன்றல்ல;இரண்டல்ல;பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றவர் ஜார்ஜ் ஹார்ட்.


அமெரிக்காவில் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் திகழும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சமற்கிருத மொழியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.எச்.டி.பட்டங்களைப் பெற்ற ஜார்ஜ் அதுபோன்றே தமிழ் மொழியிலும் பட்டங்களைப் பெற்றவர்.


அவரது ஆய்வுப்பட்டம் தமிழ-சமற்கிருதம் ஒப்பாய்வில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது.


Sunday, April 6, 2008

வளர்பிறைகள் வாழியவே - 2

நினைவில் வாழும் தமிழறிஞர் கு.சிவஞானம் அவர்களின் புதல்வியாரும் சென்னை இராணி மேரி கல்லூரித் தமிழ்ப்பேராசிரியருமாகிய முனைவர் சி.கலைமகள் அவர்களைப் பாராட்டுவதே இந்த வலைப்பதிவின் நோக்கம்.

பேராசிரியர் கு.சிவஞானம் அவர்கள் தஞ்சை சரபோசி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தபோது (1965) தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்பு உரிமைப்போர் நிகழ்ந்த்து.திரு.ம.நடராசன்('புதிய பர்ர்வை' ஆசிரியர்),திரு.பன்னீர்செல்வம்(இப்போது ஓய்வு பெற்றுள்ள அரசு அலுவலர்)முதலிய பல எழுச்சிமிக்க மாணவர்கள் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்ட நேரம்;மாணாக்கர்கள் எவ்வகையிலும் அரசின் அடக்குமுறைக் கொடுமைகளால் அல்லலுற்றுவிடக் கூடாது எனத் தாயுள்ளத்துடன் பரிந்துவந்து உதவிய பேராசிரியர் கு.சிவஞானம் அவர்கள் பிந்தைய ஆண்டுகளிலும் இந்திஎதிர்ப்புப் போர்மறவர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தார்.

அத்தகைய தமிழ் உரிமைமறவருக்கு 12/02/1965-இல் பிறந்த சி.கலைமகள் அவர்கள் 1985-இல் தமிழ் இளங்கலைப் பட்டத்தை முதல் வகுப்பு என்னும் சிறப்புத்தகுதியுடன் பெற்றார்.1987-இல் தமிழ் முதுகலைப் பட்டத்தையும் முதல் வகுப்பிலும் பல்கலைக்கழகச் சிறப்பு வரிசையிலும் பெற்றார்.

1989-இல் இளம் முனைவர்,2001-இல் பி.எச்.டி. எனப் பட்டங்களைக் குவித்த இவர்,ஓலைச்சுவடியியல்,மொழியியல்,சமற்கிருதம்,தஞ்சைமரபுவழி ஓவியம்ஆகிய துறைகளிலும் தேர்ச்சியடைந்துள்ளார்.

தமது தந்தையார் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பொறுப்பைத் திறம்பட ஆற்றியதுபோலவே கலைமகள் அவர்களும் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளர் பணியைச் சிறப்பாக ஆற்றினார்;ஆற்றிவருகிறார்.

1994-1996-இல் சென்னைக் கேளம்பாக்கம்,தனபாலன் மகளிர் கல்லூரியில் மாணவர் உளங்கொளத் தமிழ்க்கல்வி வழங்கினார்.இவரது அழுத்தம் திருத்தமான தமிழ் ஒலிப்பும்,சுவைமிக்க இலக்கிய எடுத்துக்காட்டுகளும், அனைவரையும் ஈர்க்கும் சொல்லாற்றலும் மாணவிகளுக்குத் தேனமுதமாய்ச் சுவையளிப்பன.

1996-இல் அரசு கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்.பொன்னேரி அரசு கல்லூரி,காயிதே மில்லத் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்தபின்னர் 2006 முதல் இராணி மேரி கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார்.

மலைபடுகடாம்,அகநானூற்றில் பாலைப் பாடல்கள்,இலக்கியக் கட்டுரைகள் ஆகிய தரமுயர்ந்த ஆய்வுநூல்களைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக்ம்,அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,மலேயாப் பல்கலைக்கழக்ம் ஆகிய நிறுவனங்களில் இவர் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

தேசிய மாநாடுகளிலும்,பன்னாட்டு மாநாடுகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியும் குறள்,சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பரப்பும் நோக்குடன் இலக்கியப் பேருரைகளை ஆற்றியும் இளம்பேராசிரியர்களில் இணையற்ற பெருமைக்குரியவராக விளங்குகிறார்.

“இவள் தந்தை என் நோற்றான்கொல்?” எனும் சொல்லை அனைவர் உள்ளத்திலும் எழுப்பும் ஆற்றல் மிக்க முனைவர் சி.கலைமகள் அவர்களைப் பாராட்டுவோம்.

இவரைப் போன்றே தமிழாசிரியப் பணியை உணர்வுடனும் ஊக்கத்துடனும்

ஆற்றுவோர் யாராயினும் அவர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

வளர்பிறைகள் வாழியவே-1


வளர்பிறைகள் வாழியவே--1



பட்டிமன்றத்தில் வெட்டிப் பொழுது போக்கியும்
தமிழ் மொழியுணர்வும் இனவுணர்வும் சிறிதுமின்றித்
தமிழ் விரிவுரையாளரென வேடமிட்டுக் காலம் கழித்தும் வரும் தமிழாசிரியரிடையே மாணிக்கங்களென மிளிரும் தமிழ்மணிகளும் உள்ளனர்.
அவர்களை அடையாளம் காட்டவே இப்பகுதி விழைகிறது.
தமது கலலூரிப்பணி நேரங்களில் மாணாக்கரிடையே
இலக்கியவிழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நிறைவுகொள்ளாமல் ஒரு வலைப்பூவை நடத்தித் தமிழுலகுக்குத் தொண்டாற்றி வருகிறார்,இளங்கோவன்.
http://www.muelangovan.blogspot.com/
மேலே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்திற்குச் சென்றால்
பல பயனுள்ள இலக்கியச் செய்திகள் கிடைக்கும்
மிகவும் பிற்பட்ட சூழலில் தோன்றி(20/06/1967) தமது பெற்றோரின் ஊக்குவிப்பாலும் ஆசிரியர்களின் உறுதுணையாலும் தமிழ் முதுகலை,இளம் முனைவர்,முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்ற மு.இளங்கோவன், தாம் இதழியலில் கொண்டிருந்த ஆர்வத்தினால் இதழியலிலும் முதுகலைப் பட்டம்
பெற்றுள்ளார்.
‘மராட்டியர் ஆட்சியில் தமிழ் இலக்கியம்,தமிழகம்'என்னும் ஆய்வுத்தலைப்பில்
நிகழ்த்திய ஆய்வின் விளைவினால் இளம் முனைவர் பட்டம் ஈட்டினார்.
இன்றைய சூழலில் பாரதிதாசன் மரபுக்கவிஞர்களைப் பற்றிய அறிமுகம் இளைய தலைமுறையினருக்கு ஏற்படவேண்டும் என்னும் நல்லெண்ணம் இவரது பி.எச்.டி பட்டத்திற்கான ஆய்வுப்பொருளை "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க கவிதை:பாரதிதாசன் பரம்பரை-விளக்கம்,வரலாறு,மதிப்பீடு" என்றமைத்துக்கொள்ளத் தூண்டுகோலாகியது.
செயல்துடிப்பும் வினைத்திட்பமும் வாய்க்கப்பெற்ற இவ்விளைஞர் இயற்றிய
நூல்களின் பட்டியலே இவரது புலமைக்குச் சான்றாக விளங்குகிறது.
1.மாணவராற்றுப்படை--1990
2.பனசைக்குயில் கூவுகிறது--1991
3.அச்சக ஆற்றுப்படை--1992
4.மராட்டியர் ஆட்சியில் தமிழும் தமிழகமும்--1994
5.பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு--1996
6.இலக்கியம்-அன்றும் இன்றும்--1997
7.மணல்மேட்டு மழலைகள்---1997
8.வாய்மொழிப்பாடல்கள்--2001
9.பாரதிதாசன் பரம்பரை--2001
10.அரங்கேறும் சிலம்புகள்--2002
11.பழையன புகுதலும்....---2002
12.பொன்னி பாரதிதாசன் பரம்பரை--2003
13.நாட்டுப்புறவியல்--2006
பின்வரும் நூல்களைப் பதிப்பாசிரியராகப் பணியாற்ரி வெளியிட்டுள்ளார்.
1.விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்--தன்வரலாறு--1995
2.பொன்னி ஆசிரியவுரைகள்--2004
தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு முப்பத்தேழு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கிப் பல அறிஞர்களின் பாராட்டைப்பெற்றுள்ளார்.
ஆ.கோ.குலோத்துங்கன் அவர்கள் நடத்திவரும் சிறப்புமிக்க இலக்கியத்திங்களிதழாகிய "கண்ணியம்"இதழின் சிறப்புச்செய்தியாளராகவும்,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்,தமிழியல் ஆவணத்திட்டப்பணியாளராகவும் பணியாற்றியுள்ள இளங்கோவன்,இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தொகுத்த தமிழிசைக்கலைலக்களஞ்சியத்தின் ஆராய்ச்சி உதவியாளராகச் சிறப்புறப் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆறு ஆண்டுக்காலம் ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் (99-2005)தமிழ் விரிவுரையாளராகப்
பணியாற்றியுள்ள இளங்கோவன் 18/6/2005 முதல் புதுச்சேரி,பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடாத்திவருகிறார்.
நாளொரு கட்டுரையும் பொழுதொரு வலைப்பதிவுமாகத் தொண்டாற்றிவரும் இந்த இளம்பேராசிரியர் எல்லாச் சிறப்புகளும் பெற்று உயர்க என வாழ்த்துவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
மைய,மாநில அரசு நிறுவனங்களும் தனியார் அறக்கட்டளைகளும் இவரைப் போன்ற உழைப்பாளரைத் தக்காங்கு போற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




Saturday, March 29, 2008

குருதிக் கொடை வள்ளல் பாற்கரன்

கடையேழு வள்ளல்களின் கொடைப் பண்பை இலக்கியங்களில் படித்திருக்கிறோம்.அவர்கள் தமது உடைமைகளைப் பிறர்க்குக் கொடையாக வழங்கினார்கள்.ஆனால் குருதிக்கொடைஞர்கள் தமது குருதியையே பிறர் நோயினின்றும் நீங்கி நலம் பெற வழங்குகிறார்கள்.இத்தகைய குருதிக் கொடைஞர்களில் முதலிட்ம் வகிப்பவர்,சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணியாற்றும் திரு.பாச்கரன் எனலாம்.
இதுவரை நூற்றுப்பதினான்கு முறை(114) குருதிக்கொடை வழங்கியுள்ளார்,பாச்கரன்.
1987 முதல் வருமான்வரித்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் பாச்கரன்,பாரதி பாச்கரன் எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
தமிழ் இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட இவர் பட்டிமன்றம்,கருத்தரங்கம் ஆகியவற்றில் சிறப்பாகப் பொழிவு ஆற்றுகிறார்.
29/11/1959 அன்று பிறந்த இவர் நாள்தோறும் புதிய முறைகளில் சமுதாயநலப் பணி ஆற்றிவருகிறாற்.
தமக்கு எத்தகைய விளம்பரமும் கூடாது என இவர் மறுத்துவிட்டார்.
இப்பெருந்தகை நோய்நொடியின்றி அனைத்துவளனும் பெற்று வல்லாங்கு வாழ்க என வாழ்த்துவோம்.

Friday, March 28, 2008

பட்டிமன்றம் பக்தவத்சலம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தைப் பார்த்திருப்பீர்கள்.இரண்டு நூற்றாண்டுகளாக
எழுச்சியுடன் செயல்படும் ஒய்.எம்.சி.ஏ.அமைப்பின் இலக்கியப்பிரிவுதான்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்--இந்தப்பெயரை வழங்கி இதனைத் தோற்றுவித்தவர்
தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை
இம்மன்றம் கூடும்.தமிழறிஞர்கள் மட்டுமன்றிப் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்துவர்.
இம்மன்றத்திற்குக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செயலாளராகப் பணிபுரிந்துவருபவர் பொறியாளர் கெ.பக்தவத்சலம் ஆவார்.
சென்னைக் குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்றுள்ள இவருக்கு ஓய்வில்லாத வேலை-பட்டிமன்றத்தைப் பாங்குற நடத்துவதுதான்.
எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சியளிக்கும் இப்பெருந்தகைக்குத்
தெரியாத அறிஞர்களோ,கலைஞர்களோ,எழுத்தாளர்களோ இல்லை என்றே
கூறிவிடலாம்.
அனைவரையும் ஒய்.எம்.சி.ஏ.வுக்கு அழைத்து அவரவர் விரும்பும் பொருளில்
பொழிவாற்றவைத்துத் தமிழன்பர்களுக்குச் செவிக்குணவு நல்குதலே இவரது
பணி.
தமிழ்நலம்,தமிழின் தனிச்சிறப்பு ஆகியவை காற்றில் பறந்து வெறும் நகைச்சுவைக் கச்சேரிகளாகத் தமிழ்க்கூட்டங்கள் மாறிவரும் இந்நாளில்
தரத்தையும் கருத்தையும் பேணிக் காக்கும் ஒருசில அமைப்புகளில்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றமும் ஒன்று.
அச் சிறப்புக்கு முழுமுதற் காரணம் திரு கெ.பக்தவத்சலம் அவர்கள்தான்.
ஊதியம் கருதாது உயர்தமிழ்ப்பணியாற்றிவரும் இப்பெருந்தகை
நடத்தும் நிகழ்ச்சிகளால் பட்டிமன்றம் ஒரு பல்கலைக்கழகம் போல் செயற்படுகிறது எனல் உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
எழுபது வயதை எட்டிப் பிடிக்கும் வேளையிலும் எழுச்சியுடன் செயற்படும்
பொறியாளர் பக்தவத்சலனார் 'உடல்நலனும் அனைத்து வளனும் பெற்று
மனைவி மக்களுடன் நீடு வாழ்க' என வாழ்த்துகிறோம்.

Thursday, March 27, 2008

பொன்னவைக்கோ வாழியவே


தமிழ்நிலந் தன்னில் பல்துறைக் கல்வியும்
அமைவுறச் செழித்திட அயரா(து) உழைத்திடும்
பச்சமுத்துவின் பண்பார் துணைவர்;
பொருள்வளம் நாடியே விரைந்திடும் உலகில்
தமிழ்நலம் பெருக்கிடத் தளரா உளத்துடன்
பொறியியல் பணியைப் பொருக்கென விடுத்தே
கணித்தமிழ் நூல்பல பயனுறப் படைத்தும்
இணையப் பல்கலைக் கழகம் தன்னை
இணையிலாப் பொலிவுடன் இயங்கிடச் செய்தும்
அறிவியல் வளமெலாம் அருந்தமிழ் பெறவே
அறிஞர் கூடிட ஆவன புரிந்தும்
கணினி நுட்பமும் பொறியியல் ஒட்பமும்
அனைவரும் அறிந்திட இதழ்களில் எழுதியும்
ஒல்லும் வகையெலாம் ஒண்டமிழ் உயர்ந்திட
ஓயா(து) உஞற்றிடும் உயர்பேரறிஞர்;
கனிந்த உள்ளமும் இன்முகச் செவ்வியும்
காந்தம் போன்றே நண்பரை ஈர்த்திடும்;
புன்னகை மின்னிடும் பொலிவுறு முகமோ
பொய்சொலக் கேட்டால் பொங்கிடும் எரிமலை;
செந்தமிழ் தவழ்ந்திடும் செவ்விதழ் தன்னில்
நெருப்பும் காணலாம் நெறியில் பிறழ்ந்தோர்;
காட்டாங் குளத்தூர்க் கரம்பை இவர்
காட்டிய உழைப்பால் கல்விச்சோலை;
நாட்டினில் முதன்மை நாட்டிய நிறுவனம்;
ஈட்டிய புகழால் ஈர்த்திடும் பலப்பல
நாட்டிலிருந்து நல்லறிஞர் தமை;
தன்னவைக் களத்தில் என்னையும் ஏற்றுப்
பண்புடன் பரிவும் அன்பும் செலுத்திடும்
பொன்னவைக்கோ எனும் பெருந்தகையோரை
என்ன சொல்லிப் போற்றிட இயலும்?
பாரது போற்றப் பாரதிதாசன்
பல்கலைக் கழகத் தலைமை ஏற்றார்;
தாய்மொழிக் கல்வியைத் தகவுடன் போற்றித்
தமிழ்மொழி பயின்றிடச் சட்டம் வகுத்தார்;
சமச்சீர்க் கல்வி அமைவுடன் தழைத்திட
அரசினர் குழுவில் அரும்பணி புரிகிறார்;
திட்பமும் நுட்பமும் செறிந்த செயலினர்;
நற்றமிழ்ப் புலவரைச் சுற்றமாய்ச் சூழ்ந்திடும்
பெற்றிமை பேணும் மற்றொரு பாரி;
களைப்பும் அலுப்பும் கனவிலும் அறியா
உழைப்பின் திருவுரு;உயர்குணக் கொள்கலன்;
கல்வியின் புகலிடம்; அறிவின் வைப்பகம்;
பச்சமுத்து மெசும் முத்து; பாரினில்
பல்துறை வித்தகர் போற்றும் நன்மணி;
மாணவர் மகிழ்வுடன் அவாவிடும் பசும்பொன்;
வாழிய! வாழிய பல்வளம் பெற்று!
மனைவி மக்கள் சுற்றம் எல்லாம்
நனிபல் நலனுடன் வாழ்க! வாழ்கவே!

வா.மு.சேதுராமன்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் புறநானூற்று வீரமெல்லாம்
ஒருங்கு திரண்டு வந்ததைப்போன்ற எழுச்சியும் கிளர்ச்சியும் மிக்க உருவினர்.
‘கெடல் எங்கே தமிழின் நலன்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!'
என்னும் பாவேந்தர் வாக்கே தம் வாழ்வுக் குறிக்கோள் எனக் கொண்டு அல்லும் பகலும் அருந்தமிழுக்குத் தொண்டாற்றுபவர்.உலகின் எந்த மூலையில் தமிழர் இடருற்றாலும் ஓடோடிச் சென்று உறுதுணை புரிய உழைப்பவர்.உலக உருண்டையை ஐம்பது முறை வலம் வந்தவர்.
நூறாயிரம் பாடல்களுக்கு மேல் தமிழ்க்கவிதை யாத்து நூற்றுக் கணக்கான
நூல்களை வெளியிட்டவர்.அவரை வாழ்த்தினால் அனைத்துத் தமிழ்த்தொண்டர்களையும் வாழ்த்தியதற்கு ஒப்பாகும்.எனவே அவரை வாழ்த்துவதில் பேருவகை கொள்கிறோம்.
ஆண்ட நாள் ஆண்ட பாண்டியன் போலவே
நீண்டு உயர்ந்த நெடிய தோற்றம்;
பூண்ட செருக்கிளர் பூலித்தேவனோ?
மீண்டு வந்த கட்டபொம்மனோ?
கரிகால் வளவனோ? செங்குட் டுவனோ?
ஆரியர்ச் சாய்த்த நெடுஞ்செழியனோ?
யாரிவன்? என்றே திகைக்கச் செய்யும்
சீரிய தோற்றம்; நேரிய சிந்தை;
கூரிய மதிநலன்; நினைவெலாம் தமிழ்நலன்;
குழந்தை போன்றே குமிழிடும் முறுவலன்;
அழகினில் முருகன்; பழகுதற் கினியன்;
நாடு சமயம் கட்சி என்னும்
வரம்புகள் தகர்த்தே அன்பரைப் பெற்றவன்;
ஆதி ராமனோ ஆரியர் திலகம்;
சேது ராமனோ செந்தமிழ்த் தலைவன்;
ஒவ்வொரு நொடியும் ஒண்டமிழ் நலனே
செவ்விதிற் காக்கச் செயற்படும் மறவன்;
அற்றைக் கீரர் பிற்றை இலக்குவர்
ஓருருக் கொண்ட அஞ்சா நெஞ்சினன்;
அன்னைத் தமிழ்நலன் போற்றிடும் பணியில்
சென்னைக் கோட்டை தில்லிசெங் கோட்டை
அண்ணல் இவனது அறிவுரை கேட்கும்;
ஆட்சி பயிற்சி அனைத்துத் துறையிலும்
மாட்சி பெற்று மாத்தமிழ் சிறந்திட
வாழ்நாள் எல்லாம் வருந்தி உழைப்பவன்;
உரிமை அடந்திட உயர்தமிழ் சிறந்திட
பெருமிதம் பொங்கிடப் பெருநடைப் பயணம்
சிறப்புடன் நடத்திடும் சீர்மை மிக்கவன்;
ஒண்டமிழ்க் கவிநலன் உலகோர் போற்றிட
உலகெலாம் வலம்வரும் ஒப்பிலாச் சிறப்பினன்;
தமிழின் தலைவன் இவன் என்பதால்
அமிழ்தத் தமிழால் போற்றி வணங்குவேன்;
பெருமைத் துணைவி சேதுமதியின்
பிரிவால் பெற்ற பெருந்துயர் மாற்றித்
தாயுமாகிப் புதல்வரைத் தாங்குக!
உரிமை மக்களும் உயர்புகழ்ச் சுற்றமும்
வையை யாற்று மணலினும் பன்னாள்
வாழிய! வாழிய! வண்டமிழ் போன்றே!

ஆசிரியர் அடி போற்றி

அன்னையையும் தந்தையையும் எண்ணி வணங்கி அதன்பின் ஆசிரியர்களை
வணங்கவேண்டியது நமது கடன்.அவ்வகையில் எனைப் பெற்ற அன்னையும் தந்தையும் இவ்வுலகில் இல்லையெனினும் அவர்தம் நினைவைப் போற்றி வணங்கி என் பணியைத் தொடங்குகிறேன்.
முதல் வகுப்பு முதல் முதுகலை வகுப்பு வரை எனக்குப் பாடம் நடத்தி நல்வழிப்படுத்திய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நினைந்து அவர்தம் அடி போற்றி இவ்வலைப்பூவைக் கோக்கத் தொடங்குகிறேன்.

Tuesday, March 25, 2008

Best Free Hit Counters
Free Wordpress Themes
Free Wordpress Themes

நாளும் ஒருவரை நாவாரப் போற்றுவோம்

நாளும் ஒருவரை நாவாரப் போற்றுதல் நம் கடன்.
நற்றமிழ் அறிஞர்களை,தமிழினம் தழைத்திட உழைத்துவரும் பிறதுறையினரை,
மருத்துவர்கள்,
பொறியாளர்கள்,
பல்வேறு அலுவல் புரிவோர் யாவராயினும் தமிழினம்,தமிழ்மொழி வளர்ந்திடப் பாடுபடுவோரை வாழ்த்த விரும்புகிறோம்.
அவர்களுக்கு நன்றி கூறுதற்கும்,அவர்களை இப்பணியில் மேலும் ஊக்கப்படுத்துதற்கு இவ்வாழ்த்து தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Thursday, March 20, 2008

செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்

வாழ்நாளெல்லாம் தமிழ்நலனே தமது உயிர்மூச்செனக் கொண்டு
அல்லும் பகலும் தமிழ்வளர்ச்சிக்காக உழைத்த பேரறிஞர் சி.இலக்குவனார்
நினைவைப் போற்றி நமது பணியைத் தொடங்குதலே நம் பணிக்கு ஏற்றம் வழங்கும்.
1933-இல் திருவையாற்றில் புலவர் வகுப்பு மாணவராக இருந்த காலம் தொடங்கி 1973-இல் தமது மூச்சு பிரியும் வரைத் திருக்குறள் பரப்பும் பணியைக் கைம்மாறு கருதாது ஆற்றிவந்தார்இப்பணியில் அவருக்கு ஈடு இணையாகக் கூறத் தகுந்தவர் வேறு எவரும் இலர்.
தமிழ்ப்பகைவர்களை எதிர்த்துத் தமிழின் சிறப்பைப் போற்றிடும் செயல்களில்
முனைந்து உழைத்தவரும் அவரே.
மாணவராக இருந்தபொழுது தமிழைக் குறை கூறியும் வடமொழியை மேன்மைப்படுத்தியும் உரையாற்றிய தமது கல்லூரி முதல்வர் பி.சா.சு.சாத்திரியாரை எதிர்த்துப் போர்முழக்கம் புரிந்தார்.
1938-ஆம் ஆண்டு இந்திஎதிர்ப்புப் போரில் முனைந்து வினையாற்றினார்.
பணியாற்றச் சென்ற இடங்களிலெல்லாம் மன்றங்கள் நிறுவியும்
இதழ்கள் நடத்தியும் மக்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வும் உரிமைவேட்கையும்
ஊன்றப் பாடுபட்டார்.
பதவியை இழந்தபோதும் சிறைசெய்யப்பட்டபோதும் சிறிதும் கலங்காது
தமிழ் உரிமைப்போர்த் தலைமை பூண்டார்.
தமிழ்நில வரலாற்றில் இப்படி ஒரு போராளியை இவருக்குமுன்னும் பார்த்திருக்கமுடியாது.இவ்பருக்குப் பின்னும் இப்படி ஒரு பேராசிரியரை
அடையாளம் காட்ட முடியவில்லை.
1944-இல் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபோது வகுப்பில் வருகைப்பதிவின் போது 'ஆஜர்'
என்றுகூறிவந்த மாணவர்களை ‘உளேன் ஐயா' என்றுகூறவைத்தார்.
அப்போது ஏனையதமிழாசிரியர்களே இதனை எதிர்த்தார்கள் என்பது இங்குக்
குறிப்பிடத்தக்கது.
கல்லூரிநேரத்தில் மாணவர்களிடையே தமிழுணர்வு பரப்பியதுடன் அமையாது
மாலைநேரத்தில் மன்றங்களீன் மூலம் தொல்காப்பியம்,திருக்குறள்,சங்க இலக்கியம் ஆகியவை குறித்த இலவசவகுப்புகள் நடத்தித் தமிழ்உணர்வுடன்
தமிழறிவும் தழைத்தோங்கச் செய்தார்.
ஓயாது உழைத்த இலக்குவனார்க்குப் பாராட்டும் பதக்கமுமா கிடைத்தன?
'கருப்புச் சட்டைக்காரன் மாணவர்களைக் கெடுக்கிறான்' என்னும் வசைமாரி
பொழிந்தனர்.கல்லூரி நிர்வாகத்தினர் பணியைவிட்டுத்துரத்தினர்.
தாம் பணியாற்றிவந்த ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் நீக்கப்பட்டபொழுது
தமது நிலைப்பாட்டைப் பேராசிரியர் சற்றுக்கூட மாற்றிக்கொள்ளவில்லை.
மீண்டும் தமிழுரிமை முழக்கத்தைத் தவறாது முழங்கிவந்தார்.
1965-இல் இந்திஎதிர்ப்புப் போரின்போது கைது செய்யப்பட்ட போதும் தமது
போர்ப்பண்பை மாற்றிக் கொள்ளவில்லை.
“தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம்” என்னும் பெயரில் குமரி முதல் சென்னை வரை நடைமேற்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றவேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியப்பாதுகாப்புச் சட்டம் என்னும் கடுமையான பிரிவின்கீழ்
எவ்வித நீதிவிசாரணையுமின்றி வேலூர்ச்சிறையில் அடைக்கப்பட்டார்
இரண்டரை மாதம் சிறைவாசம்!ஒரு மொழியின் நலனுக்காகப் போராடி
ஒரு மொழிப்பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு இதுபோன்று உலகில் வேறு எங்கேனும் நடந்ததுண்டா?
மீண்டும் பதவியை இழந்தார்.
துன்பமும் தொல்லையும் அவருக்குத் தொடர்ந்துநிகழ்ந்தபோதும்
எதனைப் பற்றியும் கவலைகொள்ளாது தமது தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

இலக்குவனாரின் கொள்கைப்பயணம் குறித்துத் தனியே ஒரு வலைப்பூ வழங்குதலே பொருந்தும்.
அந்தத் தமிழ்ப்போராளியைப் போற்றுதலே நமது தலையாய கடமை.
நன்றிமறந்த தமிழரிடையே மொழிநலனுக்காக எதிர்நீச்சல் வாழ்க்கை நடத்திய
அந்தத் தமிழ்த்தலைவரை நாளும் மறவாது போற்றுவோம்.
அவர் நினைவு தமிழர் உள்ளமெல்லாம் நிறைக.

Wednesday, March 19, 2008

வாழ்த்துவோம்

வாழ்த்துவோம் வாரீர்!
தமிழ் மொழி காக்க முனைந்தெழுவோரை
தமிழினம் தலைநிமிர்ந்திடத் தளராது உழைப்போரை
தம் நலம் கருதாது பதவி,பொருள் நாடாது
ஊனும் உயிரும் தேயத் தேய
உழைக்கும் பெருமக்களை
வாழ்த்துதற்கும்
வணங்குதற்கும்
இவ் வலைப்பூ வினையாற்றும்.